Sunday, September 4, 2011

அப்படி என்னசெய்கிறது
என் பார்வை
என்கிறாய் சாதரணமாக
நான் மாறிக்கொண்டிருக்கிறேன்
நினைத்ததைக் கிறுக்கும் குழந்தையாய்.
என் பார்வையில்
மறைந்தும் தெரிந்தும் விளையாடுகிறாய்
தேடலில் தொலைகிறேன் நான்.

மழைக்காலம்

ஒரு மழைக்காலத்தில்
நீ நின்றிருந்த நிறுத்தத்தில் நானும்
நெடுநேரக் காத்திருப்பிற்குப்பின்
வந்த இடியையடுத்து
அறிமுகப்படுத்திக்கொண்டோம்
அதற்குப்பின் ஆரம்பித்தது
ஓயாத மழையொன்று.

************************************************************

ஒவ்வொரு மழைக்காலத்திலும்
குடையை மறந்த நாட்கள்
நினைவுபடுத்தும்
அவளின் தாவணியை.

************************************************************

உன்னை நனைக்கும் ஆசையில்
நீ குடையெடுத்த நாட்களில்
பெய்வதில்லை மழை.

************************************************************

ஒவ்வொரு மழைக்காலமும்
கிண்டல்செய்கின்றன
உன்னுடன் நடக்கையில்
குடைக்குள்ளும் நனைந்ததுபற்றி.

************************************************************

எதிர்பாராத மழையால்
முழுவதுமாய் நனைந்திருந்தாய்
முன்பைவிடவும் உன்னை அழகாக்கிய
மழையைத் திட்டியபடி
தலைதுவட்டச்சென்ற
உன் கால்தடங்களில் நடைபழகவே
ஒளித்துவைக்கவெண்டும் உன் குடையை.

************************************************************

நீ வந்துசென்ற
நாட்களை நினைவுபடுத்தும்
நிறம் மங்கிய மருதாணி.
இனிப்பை மறைத்து எடுத்துச்செல்லும்
குழந்தையைப்போல் உணர்கிறேன்
கூட்டத்தில்
நம் பார்வை சந்திக்கும்போது.
உன்னை எனக்கு
அறிமுகம் செய்தது இசை
அதன் பின்
நம் சந்திப்புகள் அறிந்துகொண்டன
மௌனத்தை.
பெரும்பாலான காதல்
நட்பில் ஆரம்பிக்கிறதாம்
உன்னிடத்தில்
நான் எப்படித் தொடங்க.
தலையைத் தட்டி
கண்களை உருட்டி
கன்னத்தைக் கிள்ளி
நீ கொஞ்சுவதைப் பார்க்கும்போதெல்லாம்
வேண்டுகிறேன் இறைவனை
குழந்தையாகவே இருந்திருக்கலாமென.

கன்னத்தில் கைவைத்து
நீ அமர்ந்திருக்கும்
அழகைப் பார்ப்பதற்க்க்காகவே
இன்னொரு கப்பலையும்
கவிழ்கலாமென்றிருக்கிறேன்.
உனக்கான காத்திருப்போ
சாலையெங்கும்
பூக்களுடன் மரங்கள்.
நானிருந்தாலும் இல்லாவிட்டாலும்
வந்துவிடுகிறதுனக்கு வெட்கம்
என் வீட்டைக் கடக்கும்போதெல்லாம்.
உன் பார்வையின்
அதிகபட்ச ஆற்றல் தெரியாது
குறைந்தது
ஒரு காதலையாவது உருவாக்கும்.

பெண்களில் தேவதைகளில்லை
இனி தேவதைகள்
உன் பெயர்சொல்லி அழைக்கப்படட்டும்.

உன்
குழந்தைத்தனதைப் பார்க்கும்போதெல்லாம்
ஒரு மிட்டாயைக் கொடுத்து
காதலை வாங்கலாம் என்றிருக்கிறேன்.
அழகையே ஆயுதமாக
வைத்திருப்பவள் நீ
நிராயுதபாணியாக நான்
சொல்லிவிடு
இன்று போய் நாளை வா என்று.
ஏதோ ஒரு வாகனம்
செய்த தவறுக்காக
எல்லா வாகனத்தையும் துரத்தும்
நாயைப் போல
நீ செய்த தவறுக்காக
எல்லாப் பெண்களையும் துரத்துகிறது
என் காதல்.
ஒவ்வொரு விஷயத்தையும்
ஆர்வமாகக் கேட்கும் உன்னிடம்
சொல்லிக்கொண்டே இருக்கலாம்
தெரியாததையும் தெரிந்ததுபோல.
காற்றடித்த ஒருபொழுதில்
தூசியிலிருந்து கண்களைக் காப்பாற்ற
நானிருக்கும் திசையில்
முகத்தைத் திருப்பினாய்
உன் விழி தப்பியது
என் விழி மாட்டிக்கொண்டது.
இலையுதிர் காலத்தில்
மலர்ந்தது
உன் மீதான காதல்.

Thursday, September 1, 2011

காதலில்தான் கிடைக்கிறது
செய்த தவறுகளுக்கும்
செய்யாத சரிகளுக்கும்
தண்டனையாய் முத்தம்.
உன் இதழ்களில் இருக்கிறது
முத்தத்தின் முகவரி.